தீயாய் பரவிய தகவல்...அறிக்கை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்த லைகா
|லைகா நிறுவனம் 'வேட்டையன்', 'விடாமுயற்சி' உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் பல படங்களை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. அந்த வகையில், தற்போது கமல் நடிப்பில் வெளியான 'இந்தியன் 2' படத்தை தயாரித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் 'வேட்டையன்' மற்றும் அஜித் நடிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது.
இவ்வாறு முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், புதிய படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்யவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று தீயாய் பரவியது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லைகா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் லைகா நிறுவனத்தின் பெயரில் போலியான விளம்பரங்கள் வருவதாகவும், சட்டத்திற்கு புறம்பான ஏஜென்சி மற்றும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தங்களது நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் நடிகர் தேர்வுக்கான விளம்பரங்கள், தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்கள் மூலமே அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.