லண்டன் 'லெய்செஸ்டர் ஸ்கொயர் ஸ்கிரீனில்' வெளியாகும் முதல் தென்னிந்திய படம் 'தி கோட்'
|விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லண்டன்,
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்தன. இந்தபடத்தின் நான்கு பாடல்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'தி கோட்' திரைப்படம் லண்டனில் உள்ள புகழ்பெற்ற விளம்பர திரையான லெய்செஸ்டர் ஸ்கொயர் ஸ்கிரீனில் திரையிடப்பட உள்ளது. இந்த திரையில் தென்னிந்திய திரைப்படம் வெளியாவது இது முதல் முறையாகும். லண்டனில் உலகப் புகழ்பெற்ற வெளிப்புறத் திரையான லெய்செஸ்டர் ஸ்கொயர் ஸ்கிரீன் விளம்பர திரையில் இடம்பெற்று 'தி கோட்' திரைப்படம் வரலாறு படைத்துள்ளது. மேலும், இப்படம் இங்கிலாந்து முழுவதும் உள்ள திரையரங்குகளில் 300-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த பதிவு ஏ.ஜி.எஸ். நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.