< Back
சினிமா செய்திகள்
காந்தாரா பட நடிகரின் டுவிட்டர் கணக்கு தற்காலிக முடக்கம்
சினிமா செய்திகள்

காந்தாரா பட நடிகரின் டுவிட்டர் கணக்கு தற்காலிக முடக்கம்

தினத்தந்தி
|
3 Jan 2023 3:54 PM IST

காந்தாரா திரைப்பட நடிகர் கிஷோர் குமாரின் டுவிட்டர் கணக்கு தற்காலிக முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.



பெங்களூரு,


நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் 'காந்தாரா'. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வெளியானது. முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த படம், கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

நல்ல வசூலையும் குவித்தது. இதனையடுத்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய பிற மொழிகளில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படம் ரூ.500 கோடிக்கும் கூடுதலாக வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் வன துறை அதிகாரி முரளிதர் என்ற வேடத்தில் நடிகர் கிஷோர் குமார் என்பவர் நடித்துள்ளார். அவர் ஷீ மற்றும் தி பேமிலி மேன் உள்ளிட்ட வலைத்தொடரிலும் நடித்த அனுபவம் கொண்டவர். தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் அவ்வப்போது பதிவுகளை வெளிப்படை தன்மையுடன் பகிர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது டுவிட்டர் கணக்கு தற்காலிக முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அவரது டுவிட்டர் கணக்கை பயனாளர் யாரும் தேடினால், டுவிட்டரின் விதிகளை மீறியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என காட்டுகிறது. எப்போதில் இருந்து கணக்கு முடக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரவில்லை. இதுதவிர, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கிலும் அவர் தனது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்