செலவு ரூ.80 கோடி; வசூல் ரூ.10 கோடி... படுதோல்வி அடைந்த நாகார்ஜுனா மகன் படம்
|நடிகர் நாகார்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகில். இவர் தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கிறார். அகில் நடிப்பில் 'ஏஜெண்ட்' என்ற தெலுங்கு படம் தயாராகி சமீபத்தில் திரைக்கு வந்தது. இதில் மம்முட்டி, டினோ மோரியா, வரலட்சுமி, சாக்ஷி வைத்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.
ஏஜெண்ட் படத்தை ரூ.80 கோடி செலவில் எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து படுதோல்வி அடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து அகில் மற்றும் படத்தின் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி ஆகியோரை வலைத்தளத்தில் பலர் கேலி செய்தும், விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் அனில் சுன்காரா கூறும்போது, "முழு கதையுடன் படப்பிடிப்புக்கு செல்லாததே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. தவறில் பாடம் கற்றுள்ளோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.