< Back
சினிமா செய்திகள்
மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: சாந்தி தியேட்டர்
சினிமா செய்திகள்

மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: சாந்தி தியேட்டர்

தினத்தந்தி
|
22 Jun 2023 11:04 AM IST

கடவுளுக்கு பல கோவில்கள் எழுப்புவது உண்டு. இங்கே ஒரு கடவுளே தனக்கு கோவில் எழுப்பிக் கொண்டது போல், ஓர் இமாலயக் கலைஞன் தனக்குத்தானே எழுப்பி எழுந்தருளியதுதான் சாந்தி என்கிற கலைக்கோவில்.

அடேய்! எனக்காடா, சாந்தி தியேட்டரைக் காட்டுறீங்க?

-இது பட்டிக்காடா பட்டணமா படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேசும் வசனம்.

அவரை வில்லன்கள் காரில் கடத்திப் போவார்கள். அண்ணா சாலையில் போகும்போது, "பார்த்தியா இதுதான் சாந்தித் தியேட்டர்!" என்று சிவாஜிக்கு அடையாளம் காட்டுவதுடன் அவரைப் பட்டிக்காட்டான் என்று நக்கல் செய்வார்கள்.

ஆத்திரத்தில் அவர்களை அடித்துப் பந்தாடுவார், சிவாஜி. சும்மா பட்டையைக் கழற்றுவார். அப்போது அவர் பேசுவதுதான் மேலே குறிப்பிட்ட வசனம்.

இந்தக் கட்டுரையைத் தொடங்குவதற்கு முன்பு நமக்கும் அந்த வசனம்தான் நினைவுக்கு வந்தது.


சாந்தித் தியேட்டரைப் பற்றி சிவாஜியிடம் சொல்வது எவ்வளவு அறியாமையோ, அதுபோல் அவருடைய ரசிகர்களுக்கு எடுத்துச் சொல்வது என்பதும் அறியாமையே!

இருந்தாலும் சிவாஜியை நினைத்துப் பார்க்கும் இடமாகவும், சென்னை மாநகரின் ஓர் அடையாளமாகவும் அரை நூற்றாண்டுக்கும் மேல் திகழ்ந்த சாந்தி திரையரங்கை நினைவுகூறாமல் திரைக்கதைகளை யாரும் எளிதாக எழுதிவிட முடியாது.

1960-களில் சாந்தி தியேட்டர் கட்டப்பட்டது. ஜி. உமாபதியும், டி. சண்முகராஜா என்பவரும்தான் ஆரம்பத்தில் அதன் உரிமையாளர்கள்.

1961-ம் ஆண்டு ஜனவரி மாதம்12-ந்தேதி அதன் திறப்புவிழா நடந்தது. ஆலைகளையும், அணைக் கட்டுகளையும் திறந்துவைத்த திருக்கரத்தால் அப்போதைய முதல்- அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர், அந்தத் திரையரங்கைத் திறந்துவைத்தார்.

சென்னையில் டீலக்ஸ் ஏ.சி. வசதிகொண்ட முதல் தியேட்டராக சாந்தி விளங்கியது. மும்பையில் இயங்கிவந்த 'மராத்தா மந்திர்' என்ற பிரமாண்டமான தியேட்டரை நேரில் பார்த்து வந்து உமாபதி, அதேப்போன்று சாந்தியை வடிவமைத்து இருந்தார்.

அதே வருடம் மார்ச் மாதம் சிவாஜி கணேசன் நடித்த பாவமன்னிப்பு திரையிடப்பட்டு, வெற்றிக்கரமாக ஓடியது. அதன் பிறகே நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அந்தத் தியேட்டரை விலைக்கு வாங்கினார்.



1964-ல் கர்ணன் படம் அங்கு திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடியது.

வெற்றி விழாவில், நிஜமான சாரட் வண்டியில் என்.டி. ராமராவ், கிருஷ்ணன் வேடத்தில் வந்து ரசிகர்களுக்கு காட்சி அளித்து இருக்கிறார்.

சிவாஜி நடித்த 300 திரைப்படங்களின் பெயர்கள் சாந்தி தியேட்டரில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருந்தன.

எம்.ஜி.ஆர். உள்பட தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் அனைத்தையும் சாந்தித் தியேட்டரில் இடம் பெறச் செய்யவேண்டும் என்று சிவாஜி கணேசன் விரும்பினார்.

அதன்படி 1967-ம் ஆண்டு சாந்தி திரையரங்கின் முதல் மாடியில் அனைத்து தமிழ் நடிகர், நடிகைகளுடைய புகைப் படங்களையும் வரிசையாக இடம்பெறச் செய்ததோடு, அதன் திறப்பு விழாவிற்கு அனைத்து கலைஞர்களையும் நேரில் அழைத்து கவுரவப்படுத்தினார், சிவாஜி. அந்நேரம் அனைவரும் தியேட்டர் முன்பு ஒன்றாகக் கூடி குழுப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள்.

ஒரு சமயம் இந்தி நடிகர் ராஜ்கபூரின் 'சங்கம்' திரைப்படம் சாந்தியில் 100 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டு இருந்தது. அதே நேரத்தில் சிவாஜியின் சொந்தப்படமான, புதிய பறவை வெளிவர, அதை சாந்தியில் திரையிடலாம் என்று இருந்தனர். அதை அறிந்த ராஜ்கபூர், நேரடியாக சிவாஜியிடம் பேசினார். 'சென்னையில் சாந்தி போல் வேறு வசதியான திரையரங்குகள் இல்லை. எனது சங்கம் படத்தை உங்கள் தியேட்டரைவிட்டு எடுத்துவிட வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார்.

உடனே புதிய பறவை திரைப்படத்தை, சாந்திக்குப் பதிலாக அருகில் உள்ள 'பாரகன்' தியேட்டரில் சிவாஜி வெளியிட்டு இருக்கிறார். அத்தகைய பெரிய மனதுக்காரர்.

அவ்வளவு வசதிகொண்ட சாந்தி, சிவாஜி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல; அப்போது சினிமாவில் அவருக்கு சக போட்டியாளராகத் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான தியேட்டர் என்பது அதற்கு கூடுதல் பெருமை.

அதன் நிர்வாகத்தை ராம்குமாரின் மாமனார் வேணுகோபால் கவனித்து வந்தார்.

21-7-2001-ல் சிவாஜி என்ற அந்த இமயம் சாய்ந்த பிறகு, அவருடைய ரசிகர்களுக்கு சாந்தியே சிவாஜியாகத் தோன்றியது!

2005-ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி, சாய்சாந்தி என இரண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. புதுப் பொலிவுபெற்ற அந்தத் திரையரங்குகளை 14-4-2005 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திறந்துவைத்தார்.

அங்கு சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் 800 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது.

2016-ல் சூர்யா நடிப்பில் வெளியான, '24' என்ற படம்தான் அங்கு ஓடிய கடைசித் திரைப்படம்.

அதே ஆண்டு மே மாதம் 16-ந் தேதி சாந்தி என்ற அந்தக் கலைக்கூடம் இடிக்கப்பட்டது. அன்று இடிபட்டது சாந்தி மட்டுமல்ல; சிவாஜி ரசிகர்களின் இதயங்களும்தான்! அதன் வலிகுறித்து சிவாஜி சமூகநலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன், நம்மிடம் கூறும்போது, '1980-களில் முதன் முதலில் சென்னை வந்த பொழுது நடிகர் திலகம் வசித்த அன்னை இல்லத்தின் வாயிலையும், சாந்தி தியேட்டர் முகப்பையும் சென்று பார்த்ததையே ஊருக்குச் சென்று பெருமையாகப் பேசி இருக்கிறேன். சாந்தி திரையரங்க சுவர்களில் எழுதப்பட்டிருந்த நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனைப் பட்டியலைப் பற்றி சிலாகித்திருக்கிறேன்.

பின்னர், சென்னைக்கு வந்து குடியேறிய பிறகு, சாந்தி திரையரங்கம் என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான மையம் மட்டுமல்ல; சிவாஜி ரசிகர்களின் கூடுகைக்கான ஓர் இடமாகவும் திகழ்ந்தது என்பதை உணர முடிந்தது.

இப்போதும்கூட, சாந்தி திரையரங்கம் இருந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் பழைய நினைவுகள் வந்துபோகின்றன. மனது வலிக்கிறது' என்றார். ஆமாம்! அது நமக்கும்தானே?

மேலும் செய்திகள்