ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் 'பிரம்மயுகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்...!
|பர்ஸ்ட்லுக் போஸ்டரை மம்முட்டி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை,
இந்தி, தெலுங்கு, மலையாள திரையுலகில் இருக்கும் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் தமிழ் மொழியிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த வரிசையில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படமும் மலையாள மொழியில் மட்டுமின்றி தமிழிலும் வெளியாக இருக்கிறது. மேலும் பல மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படத்தில் வரும் மம்முட்டியின் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தை ராகுல் சதாசிவன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சக்கரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் மம்முட்டியின் நடிப்பில் வெளியான கண்ணூர் ஸ்க்வாட் வெற்றி பெற்றதால் இந்தப்படத்துக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இன்று 'பிரம்மயுகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரை மம்முட்டி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.