'இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம்' - ஜோதிகா படத்தை பாராட்டி பதிவிட்ட சமந்தா..!
|மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்துள்ள 'காதல் தி கோர்' திரைப்படத்தை நடிகை சமந்தா பாராட்டியுள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, தற்போது நடிகர் மம்மூட்டியுடன் 'காதல் தி கோர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மம்மூட்டி கம்பெனி தயாரிக்கும் இந்த படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார்.
காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'காதல் தி கோர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு கடந்த மாதம் அறிவித்தது.
அதன்படி கடந்த 23ம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மம்மூட்டி, மற்றும் ஜோதிகாவின் நடிப்பை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், 'இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம், உங்களுக்கு நீங்க நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் 'காதல் தி கோர்' திரைப்படத்தை பாருங்கள். மம்மூட்டி சார் நீங்கள் தான் என் ஹீரோ. உங்கள் நடிப்பில் இருந்து என்னால் நீண்ட காலத்திற்கு வெளியே வர முடியாது. லவ் யு ஜோதிகா. ஜியோ பேபி நீங்கள் ஒரு லெஜெண்ட்' என்று பதிவிட்டுள்ளார்.