படத்தின் டைட்டிலுடன் வெளியான ரிலீஸ் தேதி... பெண் இயக்குனருடன் கைகோர்க்கும் யாஷ்..!
|நடிகர் யாஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1 மற்றும் 2ம் பாகம் படங்கள் இவரை உலக அளவில் பிரபலமடைய செய்தது. அந்த படத்தில் 'ராக்கி' கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவர் நடிப்பில் கடைசியாக கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகம் வெளியானது. அந்த படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனிடையே ரன்பிர் கபூர் - ஆலியா பட் நடிப்பில் இந்தியில் தயாராகும் 'ராமாயணம்' படத்தில் யாஷ் ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. 3 பாகங்களாக தயாராகும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் யாஷ் நடிக்கும் புதிய படத்தில் பெண் இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. யாஷ்-ன் 19வது படமாக தயாராகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்க உள்ளார். இவர் தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நளதமயந்தி, பொய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் இந்தியில் ஒருசில படங்களை இயக்கி உள்ளார்.
கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சரண்ராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று படத்தின் டைட்டிலுடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 'டாக்ஸிக்' (TOXIC) என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 2025ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் யாஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.