தனது படத்தை விளம்பரப்படுத்த தெரு தெருவாக சென்று போஸ்டர் ஒட்டிய நடிகை
|நடிகை நீரஜா தான் நடித்த படத்தை விளம்பரம் செய்ய தெருதெருவாக சென்று போஸ்டர் ஒட்டி இருக்கிறார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளார்கள்.
திரைக்கு வரும் புதிய படங்களை விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க படக்குழுவினர் படாதபாடுபடுகின்றனர். இதற்காக பட விழாக்களையும் நடத்துகின்றனர்.
ஆந்திரா, கேரளா, மும்பைக்கு நடிகர்-நடிகைகளை அழைத்துச் சென்றும் விழாக்களில் பங்கேற்க வைக்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு நடிகர் - நடிகைகள் சிலர் செல்வது இல்லை. இவர்களுக்கு மத்தியில் ஒரு நடிகை தான் நடித்த படத்தை விளம்பரம் செய்ய தெருதெருவாக சென்று போஸ்டர் ஒட்டி இருக்கிறார்.
அந்த நடிகையின் பெயர் நீரஜா. இவர் ரங்கூன் சின்னத்தம்பி இயக்கிய 'மஞ்சக்குருவி' படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தை மக்களிடம் விளம்பரம் செய்ய நீரஜா தெருவில் இறங்கினார். படத்தின் போஸ்டர்களை சுமந்து வீதிவீதியாக சென்று சுவர்களில் ஒட்டினார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளார்கள்.