'பஞ்சதந்திரம்' 2-ம் பாகம் எடுக்க நடிகை விருப்பம்...!
|பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவேண்டும் என்று அதில் நடித்த நடிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்
கமல்ஹாசனின் முக்கிய படங்களின் ஒன்று பஞ்சதந்திரம். இந்தப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார்.
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2-ம் பாகம் ஏற்கனவே வந்தது. தற்போது இந்தியன் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவேண்டும் என்று அதில் நடித்த நடிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே ஸ்ரீமன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "என்னிடம் நிறைய பேர் பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். கமல்ஹாசன் முடிவு செய்தால் அது நடக்கும்.'' என்றார். தற்போது ரம்யாகிருஷ்ணனும் பஞ்சதந்திரம் 2-ம் பாகம் எடுக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறும்போது, "கமல்ஹாசனுடன் எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பஞ்சதந்திரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்தப்படத்தில் எனது கதாபாத்திரம் முடிவடையவில்லை. எனவே பஞ்சதந்திரம் 2-ம் பாகம் எடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன். 2-ம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.