ரேணுகாசாமி தனக்கும் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக நடிகை பரபரப்பு தகவல்
|ரேணுகாசாமி தனக்கும் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக நடிகை சித்ரால் ரங்கசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு,
சித்ரதுர்கா டவுன் பகுதியை சேர்ந்த நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகனான ரேணுகாசாமி(வயது 33), நடிகை பவித்ரா கவுடாவுக்கு சமூக வலைதளம் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பினார். இதுபற்றி அறிந்த நடிகர் தர்ஷன், தன்னுடைய கூட்டாளிகள் மூலம் ரேணுகாசாமியை கடத்தி வந்து படுகொலை செய்தார். இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ரேணுகாசாமி தனக்கும் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த சித்ரால் ரங்கசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் 'நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக ரேணுகாசாமிபடுகொலை செய்யப்பட்டார்.
ரேணுகாசாமி எனக்கும் இதேபோல் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பினார். போலி இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதில் இருந்து ஆபாச குறுந்தகவல்களை அவர் அனுப்பினார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கணக்கை ரேணுகாசாமி பயன்படுத்தியது பற்றி அறிந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பே அவர் எனக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பினார்.
அவரது கணக்கை நான் பிளாக் செய்தேன். இதுதொடர்பாக மார்ச் மாதம் நான் போலீசிலும் புகார் அளித்தேன். இந்த வழக்கில் நான் யாரையும் காப்பாற்ற முயலவில்லை.
கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரேணுகாசாமியின் போலி கணக்கில் இருந்து தனக்கு வந்த ஆபாச குறுந்தகவல்கள் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அவர் தனது பதிவில் இணைத்துள்ளார். தற்போது அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.