பிரிந்த மனைவியுடன் மீண்டும் இணைந்த நடிகர்
|இரண்டாவது மனைவி எலிசபெத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த நடிகர் பாலாவின் வீடியோவும், புகைப்படமும் வலைத்தளத்தில் வைரலாகிறது. மனைவியுடன் பாலா மீண்டும் இணைந்து விட்டதாக கருதி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பியாக நடித்து இருந்தார். கடந்த 2010-ல் அமிர்தா சுரேஷ் என்பவரை பாலா காதலித்து திருமணம் செய்து 2016-ல் விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பிறகு சென்ற வருடம் எலிசபெத் என்பவரை பாலா 2-வது திருமணம் செய்து கொண்டார். சில வாரங்களுக்கு முன்பு பாலாவும், எலிசபெத்தும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக தகவல் பரவியது.
இதுகுறித்து பாலா முகநூலில் கூறும்போது, "இது நிஜமாகவே வேதனை அளிக்கிறது. திருமணம் இரண்டாவது முறை தோல்வியுற்றால் யோசிக்க ஆரம்பிக்கிறோம். என்னை இந்த நிலைக்கு தள்ளிய ஊடகங்களுக்கு நன்றி. நீங்கள் வற்புறுத்தினாலும் நான் எலிசபெத்திடம் பேசமாட்டேன். எலிசபெத் என்னை விட சிறந்தவர்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாலா நடித்த மலையாள படம் தற்போது திரைக்கு வந்துள்ள நிலையில் இரண்டாவது மனைவி எலிசபெத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருந்தார். இதுகுறித்து வீடியோவும், புகைப்படமும் வலைத்தளத்தில் வைரலாகிறது. மனைவியுடன் பாலா மீண்டும் இணைந்து விட்டதாக கருதி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.