< Back
சினிமா செய்திகள்
நாட்டு நாட்டு பாடல்
சினிமா செய்திகள்

இந்திய பாடல்களுக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் கவுரவம்

தினத்தந்தி
|
11 May 2024 7:23 AM IST

இந்திய இசையின் பெருமையை உலகம் முழுவதும் தெரியப்படுத்த வேண்டும் என்பற்காக இந்த ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம் என்று ஆஸ்கார் அகாடமி மியூசியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது.

அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதனிடையே, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது.

எத்தனையோ வருட கனவாக இருந்த புகழ்பெற்ற ஆஸ்கார் விருதை பெற்று இந்திய சினிமாவின் பெருமையை ஆஸ்கார் மேடையில் நிலை நிறுத்தியது ஆர்ஆர்ஆர் படம்.

இதுபோல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து 2009-ல் திரைக்கு வந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலும் ஆஸ்கார் விருதை வென்றது. ஏற்கனவே அமீர்கான் நடித்த லகான் இந்தி படத்தில் இடம்பெற்ற பாடலும் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றது. உலக சினிமா ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற இந்த பாடல்களை தற்போது அகாடமி மியூசியம் ஆப் மோஷன் பிக்சர்ஸ், மியூசிக்கல் டேப்ஸ்ட்ரீஸ் என்ற பெயரால் ஒளிபரப்பி கவுரவிக்க இருப்பதாக அறிவித்து உள்ளது.

வருகிற 18-ந்தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டேவிட் ஜப்பேன் தியேட்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் மூன்று இந்திய பாடல்களையும் ஒளிபரப்ப இருக்கிறார்கள். இந்திய இசையின் பெருமையை உலகம் முழுவதும் தெரியப்படுத்த வேண்டும் என்பற்காக இந்த ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம் என்று ஆஸ்கார் அகாடமி மியூசியம் தனது அதிகாரபபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்