உலகக்கோப்பையை வென்றதற்கு நன்றி; ரோகித் என நினைத்து ஹிப் ஹாப் ஆதிக்கு வாழ்த்து கூறிய ரசிகர்
|டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
லண்டன்,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருக்கும் ஹிப் ஹாப் ஆதி தற்போது லண்டன் சென்றுள்ளார். அங்கு அவரை ரோகித் சர்மா என நினைத்து உலகக்கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள் என ஆஸ்ரேலியாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் கூறியுள்ள நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஆதி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், லண்டனில் நடிகர் ஆதியை பார்த்த ரசிகர்கள் பலரும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள். அப்போது ஆஸ்ரேலியாவை சேர்ந்த ஒருவர் வேகமாக வந்து ஹிப் ஹாப் ஆதியை கட்டியணைத்து கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
பிறகு உலகக்கோப்பையை வென்று இருக்கிறீர்கள் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி என்று ஆதியை பார்த்து அந்த நபர் கூற ஆதி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பிறகு அந்த நபரிடம் எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று ஆதி கேட்க அதற்கு அந்த நபர் நீங்கள் ரோகித் சர்மா தானே? என்று கேட்கிறார்.
உடனே சிரித்த ஆதி நான் ரோகித் சர்மா இல்லை. நான் இந்தியாவை சேர்ந்த ஒரு இசையமைப்பாளர் என்று கூறி விளக்கம் கொடுத்துள்ளார். உடனே இதனை கேட்ட அந்த நபர் சிரித்துக்கொண்டே சென்றார். இந்த வீடியோவை ஹிப் ஹாப் ஆதி தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரோகித் சர்மாவையும் டேக் செய்துள்ளார்.