'தங்கலான்' படம் ஆஸ்கர் விருது பெறும் - தயாரிப்பாளர் தனஞ்செயன்
|'தங்கலான்' படம் ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தரும் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.
சென்னை,
பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்' . இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 5-ந் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் படத்தின் புரோமோசனுக்காக படக்குழு வெவ்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றன.
புரோமோசன் பணிக்காக செல்லும் படக்குழு, அங்கு ரசிகர்களைச் சந்தித்து படம் குறித்தான பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இப்படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்த படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தினை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும்.
சமீபத்தில் படத்தின் புரோமோசன் பணிகள் கோவையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களின் சந்திப்பின் போது, தங்கலான் படம் ஆஸ்கருக்குச் செல்லுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் கூறுகையில், " நிச்சயம் படத்தினை ஆஸ்கருக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். படம் கட்டாயாம் ஆஸ்கருக்கு பரிந்துரைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, நிச்சயம் இந்திய சினிமாவிற்கு இந்த படம் பெருமையைத் தேடித்தரும்" என்று கூறியுள்ளார்.