ஷாருக்கானுடன் நடிக்கும் விஜய்?
|ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை டைரக்டு செய்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஏற்கனவே நடத்தி முடித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு புனேயில் நடந்த படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்று நடித்தார். தாய்லாந்தில் தேனிலவுக்கு சென்றுள்ள நயன்தாரா அங்கிருந்து திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் ஜவான் படத்தில் விஜய், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக இந்தி இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனே நடிக்க சம்மதித்து விட்டார் என்றும், விஜய்யிடம் படக்குழுவினர் பேசி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய அக்ஷய்குமாரின் ரவுடி ரத்தோர் இந்தி படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் விஜய் நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜவான் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.