'தளபதி 69' - விஜய்க்கு ஜோடியாகும் மலையாள நடிகை?
|'தளபதி 69' படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளியிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
சென்னை,
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
அவர் அடுத்து நடிக்கும் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் அவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சி தீவிரமாக களம் இறங்கப் போகிறது.
விஜய்யின் கடைசி படத்தை எச்.வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது விஜய்க்கு 69-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 'தளபதி 69' படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளியிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
அபர்ணா பாலமுரளி ஏற்கனவே தமிழில் 2020-ல் வெளியான சூரரை போற்று படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார். தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.