'தலைவர் 171 ' படத்தில் இணையும் ரன்வீர் சிங்?
|‘தலைவர் 171 ' படத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ரஜினி படத்துக்கு தற்காலிகமாக 'தலைவர் 171' என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த வாரம் வெளியானது.
மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார்.இதனை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவியது.
மேலும் 'தலைவர் 171' படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் வைக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த டைட்டில் பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டு அந்த படம் வெளியானது. மேலும் 'தலைவர் 171' படம் தங்கக் கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி மாபியா டானாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 'தலைவர் 171' படத்தில் ரஜினியுடன் இந்தி நடிகர் ஷாருக்கானை இணைந்து நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டதாகவும் அதனை ஷாருக்கான நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 'தலைவர் 171' படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.