'கஞ்சா சங்கர்' படத்தின் தலைப்பை மாற்றக்கோரி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நோட்டீஸ்
|போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர், போதை பொருள் தொடர்பான ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருந்தால் அதை தவிர்க்குமாறு திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கஞ்சா சங்கர்'. இந்தப் படத்தை சம்பத் நந்தி இயக்குகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்புக்கு, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர், படத்தின் இயக்குநர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் நாகவம்சி, நாயகன் சாய் தரம் தேஜ் ஆகியோருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ஹீரோ கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவது போலவும் அவர் செயல்களை கொண்டாடுவதாகக் காட்டுவதும் ஏற்புடையதல்ல. தலைப்பில் இருக்கும் கஞ்சா என்ற வார்த்தை பார்வையாளர்களிடையே குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த தலைப்பை மாற்ற வேண்டும். போதை பொருள் தொடர்பான ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருந்தால் அதை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் எச்சரித்துள்ளார்.