< Back
சினிமா செய்திகள்
ஜவான் பட பாடலுக்கு சிகிச்சை வார்டில் இளம்பெண் நடனம்... ஷாருக் கானின் அசத்தல் பதில்
சினிமா செய்திகள்

ஜவான் பட பாடலுக்கு சிகிச்சை வார்டில் இளம்பெண் நடனம்... ஷாருக் கானின் அசத்தல் பதில்

தினத்தந்தி
|
17 Sept 2023 7:12 PM IST

இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, ஜவான் பட பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவுக்கு ஷாருக் கான் அசத்தலான பதிலளித்து உள்ளார்.

புனே,

நடிகர் ஷாருக் கான் இரட்டை வேடத்தில் நடித்து, அட்லி இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை படைத்து வரும் படம் ஜவான். இந்த படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் ராமய்யா... வஸ்தாவையா..., சலேயா ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலங்களில் ஒருவரான பிரிஷா டேவிட் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அப்போது, சலேயா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். ஷாருக் கானுக்கு சுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது என தலைப்பிட்டு பதிவை வெளியிட்டு உள்ள அவர், குணமடைந்து மீண்டு வர ஷாருக் கானின் ஜவான் பட பாடல்கள் பெரிதும் உதவின என்று குறிப்பிட்டு உள்ளார்.

வீடியோவில் பிரிஷா, மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அணிய கூடிய கவுன் அணிந்து காணப்படுகிறார். இந்த வீடியோ, ஷாருக் கான் கவனத்திற்கு சென்றுள்ளது.

அவர் இந்த வீடியோவுக்கு எக்ஸ் சமூக ஊடகத்தில் அளித்துள்ள பதில் பதிவில், இது மிக நன்றாக உள்ளது. நன்றி. விரைவில் குணமடைந்து வரவும். வந்து படம் பார்க்கவும். நீங்கள் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து நடனம் ஆடும் மற்றொரு வீடியோவை காண காத்திருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்