< Back
சினிமா செய்திகள்
ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை... புஷ்பா பட நடிகர் கைது...!
சினிமா செய்திகள்

ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை... புஷ்பா பட நடிகர் கைது...!

தினத்தந்தி
|
7 Dec 2023 12:50 PM IST

இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் புஷ்பா பட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தில் நடிகர் அல்லுஅர்ஜுனின் நண்பர் கதாபாத்திரத்தில் துணை நடிகர் ஜெகதீஷ் நடித்திருந்தார். இவர் மல்லேசம், ஜார்ஜ் ரெட்டி, பலாசா 1978 உள்ளிட்ட பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பெற்றார். புஷ்பா படத்தில் இவர் நடித்த கேசவா கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் இவருக்கு காக்கிநாடவை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அந்த பெண் சினிமாவில் நடிக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. நடிகர் ஜெகதீஷ் அந்த பெண்ணுடன் ஒரே வீட்டில் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஜெகதீசை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் ஜெகதீஷ் சில காலம் கழித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி வந்துள்ளார். இதற்கிடையே ஜெகதீஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த இளம் பெண் ஜெகதீஷை ஒதுக்கி வைத்து விட்டு வேறு ஒரு வாலிபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனை அறிந்த ஜெகதீஷ் இளம் பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராரில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அந்த இளம்பெண் வேறொரு வாலிபருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதனை ஜெகதீஷ் சமையலறை ஜன்னல் வழியாக தனது செல்போனில் போட்டோ வீடியோ எடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து இளம் பெண் வீட்டிற்கு சென்று கதவை தட்டி தான் எடுத்த போட்டோக்களை அவரிடம் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு இருந்த வாலிபர் ஜெகதீசை விரட்டி அடித்து போலீசிடம் தகவல் தெரிவிப்பதாக கூறி மிரட்டியுள்ளார்.

2 நாட்கள் கழித்து ஜெகதீஷ் தான் எடுத்த அரை நிர்வாண போட்டோக்களை இளம்பெண் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைத்தார். தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அவரை மிரட்டி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த இளம் பெண் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பஞ்சகுடா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்த வாலிபரை செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெகதீஷ் மிரட்டியதால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அந்த வாலிபர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் 2 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து ஜெகதீசை கைது செய்தனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்