தொழில்நுட்ப பணிகள் தீவிரம் 'பொன்னியின் செல்வன்-2' முன்கூட்டியே ரிலீஸ்?
|தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடியும் தருவாயில் உள்ளதால் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் முன்கூட்டியே வெளியிட முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்ய லட்சுமி என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர். முதல் பாகத்தை எடுத்தபோதே, இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பும் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டு பாகங்களுமே சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்ததாகவும், அந்த தொகை முழுவதும் முதல் பாகத்திலேயே கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகம் வசூல் தியேட்டர் வெளியீட்டில் மட்டுமே ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. முதல் பாகத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.125 கோடிக்கு மேல் விலைபோய் அந்த தொகை லாபமாக வந்துள்ளது என்கின்றனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வசூல் முதல் பாகத்தை மிஞ்சும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள். இரண்டாம் பாகத்துக்கான டப்பிங், கிராபிக்ஸ், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் சென்னை மற்றும் மும்பை ஸ்டுடியோக்களில் விறுவிறுப்பாக நடந்து முடியும் தருவாயில் உள்ளது. இரண்டாம் பாகத்தை ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதற்கு ஓரிரு மாதங்கள் முன்கூட்டியே வெளியிட முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.