கைதி படத்தின் இந்தி ரீமேக் 'போலா' டீசர் வெளியானது...
|கைதி திரைப்படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். போதைப் பொருள் கடத்தல் என்ற கருவை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியிருந்தது.
இந்த படத்தில் நடிகர் கார்த்தியின் மாறுபட்ட நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது. அதே நேரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களிலும் கைதியின் தொடர்ச்சி இடம்பெற உள்ளது.
இந்த நிலையில் கைதி திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனை நடிகர் அஜய் தேவ்கன் இயக்கி நடித்துள்ளார். இந்த போலா படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் 3-டியில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டீசரைப் பார்த்த ரசிகர்கள், தமிழில் வெளியான கைதி படத்திற்கும், போலா படத்தின் டீசர் காட்சிகளுக்கும் பல மாறுதல்கள் தென்படுவதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.