"6 பூகம்பங்களை தாங்கி நிற்கும் தஞ்சை பெரிய கோவில்" - மும்பையில் நடிகர் விக்ரம் பேச்சு
|வட இந்தியா, தென் இந்தியா என பிரித்துப் பார்க்க வேண்டாம், நாம் எல்லாம் இந்தியர்கள் என்பதில் பெருமைப்பட வேண்டும் என நடிகர் விக்ரம் பேசினார்.
மும்பை,
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினர். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், "வரலாற்றை தெரிந்து கொள்வது எந்த அளவு முக்கியமானது?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த போது நடிகர் விக்ரம் பேசியதாவது;-
"நாம் எகிப்தில் உள்ள பிரமீடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டி இருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கிறோம். ஆனால் நம் இந்தியாவில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. அதில் உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான்.
சோழ மன்னர் ராஜராஜ சோழன் அந்த கோவிலைக் கட்டினார். உலகத்திலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் அதுதான். அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் மட்டும் 80 டன் எடை கொண்டது.
பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தைப் பார்த்து நாம் வியப்படைகிறோம், பாராட்டுகிறோம். ஆனால் தஞ்சை பெரிய கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக 6 பூகம்பங்களை தாங்கி இன்று வரை நிற்கிறது. அதிலும் எந்த வகையான பிளாஸ்டர்களும் இல்லாமல் அந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
அது எப்படி சாத்தியமானது என்றால், முதலில் சுற்றுச்சுவர், பின்னர் 6 அடி நீளத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன்பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டி உள்ளனர். அதனால் தான் அது இத்தனை பூகம்பங்களையும் தாண்டி இன்றளவும் நிலைத்து நிற்கிறது.
எந்திரங்கள் எதுவும் இல்லாமல், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களைக் கொண்டு அவ்வளவு பெரிய கட்டுமானத்தைக் கட்டியுள்ளனர். மேலும் ராஜராஜசோழன் தனது காலத்தில் 5 ஆயிரம் அணைகளை கட்டியுள்ளார். நீர் மேலாண்மைக்கு தனி துறையை அமைத்துள்ளார். அந்த காலத்திலேயே தேர்தல்கள் நடத்தியுள்ளனர். ஆறுகளுக்கு பெண்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். இலவச மருத்துவமனைகள் கட்டியுள்ளனர். கடன் உதவிகளையும் வழங்கி கண்ணியமாக வாழ்ந்துள்ளனர்.
இவையெல்லாம் 9-ம் நூற்றாண்டில் நடந்தவை என்றால் ஆச்சரியமாக உள்ளது. இதெல்லாம் நடந்து சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு தான் கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டுபிடித்தார். இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். வட இந்தியா, தென் இந்தியா என பிரித்து பார்க்க வேண்டாம். நாமெல்லாம் இந்தியர்கள். அதனால் நாம் இவர்களையெல்லாம் கொண்டாட வேண்டும்."
இவ்வாறு நடிகர் விக்ரம் பேசினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Right from the bottom of @chiyaan
s heart . No wonder we all love him !
The way he explains about the structure of Tanjore temple - just pure passion ! #PonniyinSelvanpic.twitter.com/QtXN1eZ44Q