மீண்டும் தமிழ் பட வாய்ப்பு: ஆஸ்கார் விருது பெற்ற கீரவாணி நெகிழ்ச்சி...!
|இசையமைப்பாளர் கீரவாணி தமிழில் ஜென்டில்மேன் 2 படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்
ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி தமிழில் ஜென்டில்மேன் 2 படத்துக்கு இசையமைக்க இருக்கிறார். இதில் நாயகனாக சேத்தன் சீனு, நாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்கின்றனர். கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கிறார். கீரவாணிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்று மீண்டும் தமிழ் படத்துக்கு இசையமைப்பதற்காக நெகிழ்ந்தார். அவர் பேசும்போது, "தமிழ்நாட்டுக்கும், எனக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. என் தந்தை சென்னையில் பணி செய்தபோது என் தாயின் கருவில் உருவானவன் நான். அந்த வகையில் என்னுடையது தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா என்பேன்.
22 வருடமாக சென்னையில்தான் இருந்தேன். அதன்பிறகு தொழில் நிமித்தம் காரணமாக ஐதராபாத்திற்கு மாறினேன். மீண்டும் தமிழ் படத்துக்கு இசையமைப்பது மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த தமிழ் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து.
இவர்கள் மூவர் எழுதிய பாடல்களையும் கேட்கும்போது நமக்கு எனர்ஜி கிடைக்கும். இப்போதும் வானமே எல்லை படத்தின் பாடலைக் கேட்டால் மன அழுத்தம் ஓடிப்போய் விடுகிறது. நூறு சதவீதம் அர்ப்பணிப்புடன் இந்த படத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக கொடுப்பேன்" என்றார்.