புது களத்தில் தமிழ் சினிமா
|`தேவதாஸ்' காலம் தொடங்கி `லவ் டுடே' காலம் வரை தமிழ் சினிமா வித்தியாசமான கோணங்களில் கதை சொல்லி திரைப்படத்துறையை ஆரோக்கியமாக வைத்துள்ளது. காட்சிகள் மாறவில்லை என்றாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும்சினிமா புதுப் புது களங்களில் பயணிக்கிறது.
ஆரம்பத்தில் இதிகாசங்களையும் மன்னர்களையும் மையப்படுத்தி படங்கள் வந்தன. அதன்பிறகு சமூக கருத்துகள், காதல் மற்றும் வாழ்வியல் சார்ந்த படங்கள் வெளியானது. இப்போது ரசிகர்கள் ரசனை விஷுவல் எபெக்ட்ஸ், கிராபிக்ஸ் போன்ற நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப படங்களுக்கு மாறி உள்ளது. இதற்கு `பாகுபலி', `கே.ஜி.எப்', `பொன்னியின் செல்வன்' படங்கள் அடித்தளமிட்டு உள்ளன. இவை சினிமாவின் களத்தை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளன.
கதாநாயகர்கள் தங்கள் தோற்றங்களை வித்தியாசப்படுத்தி புதிய களம் மற்றும் தொழில்நுட்பத்தில் உருவாகும் பிரமாண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அதில் சில படங்கள் விவரம்:-
தங்கலான்
விக்ரம் நாயகனாக நடிக்கிறார். இயக்குனர் பா.ரஞ்சித் வித்தியாசமான கதைக் களத்துடன் படம் இயக்குபவர் என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக கோலார் பகுதியில் தங்கம் சுரண்டும் பணிக்காக சென்ற தமிழர்களின் வாழ்க்கையை அந்த காலத்துக்கே அழைத்துச் செல்லும் அளவுக்கு `பீரியட்' படமாக எடுத்து வருகிறார்கள். நடிப்புக்காக பல்வேறு சோதனை முயற்சியை எடுக்க தயங்காத விக்ரம், முதல் பார்வை போஸ்டரில் ஆதிமனிதன்போல் தன்னை உருமாற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
கங்குவா
சூர்யா நாயகனாக நடிக்கிறார். கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குனர் சிவா முதன் முறையாக `பீரியட்' படமாக இதை இயக்கி வருகிறார். 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ளது. நடிகர்களின் தோற்றம், உடையலங்காரம் என அனைத்தும் இதுவரை காணாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லுவது போல் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் `கிளிம்ப்ஸ்' அமைந்திருந்தது.
கேப்டன் மில்லர்
ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்து வந்த தனுஷ், பிறகு `கர்ணன்', `அசுரன்' என சிறந்த படைப்புகளில் நடித்து தன்னை தேர்ந்த நடிகராக வெளிப்படுத்திய நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் `கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு போராளியாக தனுஷ் வருகிறார்.
கல்கி
கமல்ஹாசன், பிரபாஸ் அமிதாப்பச்சன் நடிக்கும் படம், `கல்கி'. படப்பிடிப்பு தொடங்காத நிலையிலேயே இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகிஉள்ளது. சயின்ஸ்பிக்ஷன் படமாக உருவாகும் இதன் கதையை 28- ம் நூற்றாண்டில் நடப்பதுபோல் எழுதியுள்ளாராம் இதன் இயக்குனர் நாக் அஸ்வின்.
வேள்பாரி
`இந்தியன் -2' படத்தை முடித்ததும், `வேள்பாரி' என்ற சரித்திரக் கதையை படமாக்க உள்ளார் இயக்குனர் ஷங்கர். நிகழ்கால கதையையே பிரமாண்டமாக எடுக்கும் ஷங்கரிடம் சரித்திரக் கதையை கொடுத்தால் சும்மா இருப்பாரா? கற்பனைக் குதிரையை ராக்கெட் வேகத்தில் செலுத்துவது நிச்சயம் என்பதால் இந்தப் படத்தின் அப்டேட்டை அறிவதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.