முதல் முறையாக மலையாள படத்தில் நடிகை தமன்னா
|தமன்னா முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில வெற்றி படங்களில் நடித்து 17 ஆண்டுகளாக சினிமாவில் நீடித்து வரும் தமன்னா பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தெலுங்கில் குர்துந்தா சீதா காலம், சிரஞ்சீவியின் போலா ஷங்கர் மற்றும் இந்தியில் பப்லி பவுன்சர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். சில வெப் தொடரிலும் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும், இந்தியிலும் மட்டுமே நடித்து இருந்த தமன்னா தற்போது முதல் முறையாக மலையாள சினிமா துறையில் அடியெடுத்து வைக்கிறார்.
அருண் கோபி இயக்கும் மலையாள படத்தில் திலீப் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இதுகுறித்து தமன்னா கூறும்போது, ''நடிப்பிற்கு வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் மூலம் மலையாள சினிமாவில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற முயற்சி செய்வேன்" என்றார்.