சிவ சக்தியாக தமன்னா: அறிமுக வீடியோ வெளியிட்ட 'ஒடேலா 2' படக்குழு
|நடிகை தமன்னா நடித்துவரும் ‘ஒடேலா 2’ படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் நடிகை தமன்னா. ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர், லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. தமிழில் 'அரண்மனை 4' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் 'ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்'. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் நடிக்கின்றனர். 'காந்தாரா' புகழ் அஜனேஷ் லோக்நாத் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கிறார்.
முதல் தோற்றத்தை பொறுத்தவரை காவி உடை, கையில் உடுக்கையுடன் பக்தி நிரம்பிய முகத்துடன் ஆன்மிக பயணத்தை தமன்னா மேற்கொள்வது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் இருக்கும் பகுதி காசியாக இருக்கலாம் என தெரிகிறது. மேலும் தமன்னா தீவிர சிவன் பக்தராக நடித்திருப்பதும், படம் ஆன்மிக பயணத்தை அடிப்படையாக கொண்டதையும் போஸ்டர் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் சிவ சக்தியாக தமன்னா எப்படி மாறினார் என்ற அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. 2-ஆவது கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக படக்குழு வீடியோவில் தெரிவித்துள்ளது.