டைரக்டருடன் தமன்னா மோதல்
|எப் 3 தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் தமன்னாவுக்கும், டைரக்டருக்கும் இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். போலா சங்கர் தெலுங்கு படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார். அஜித்குமார் நடிப்பில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இது தயாராகிறது.
தமன்னா நடிப்பில் எப் 3 தெலுங்குபடம் சமீபத்தில் வெளியானது. இதில் வெங்கடேஷ், வருண்தேஜ், மெஹ்ரீன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனில்ரவிபுடி இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் தமன்னாவுக்கும், டைரக்டருக்கும் இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. டைரக்டர் அனில்ரவிபுடியே இதனை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "எனக்கும், தமன்னாவுக்கும் படப்பிடிப்பில் வாக்குவாதம் ஏற்பட்டது. படத்தை அவசரமாக முடிக்க வேண்டும் என்ற மனநிலையில் நான் இருந்தேன். தமன்னாவுக்கு மறுநாள் வேறு இடத்தில் இன்னொரு படப்பிடிப்பு இருந்தது. அதற்காக அவசரமாக செல்ல நினைத்தார். ஆனால் எங்கள் படத்தில் அவர் நடிக்க வேண்டிய காட்சி பாக்கி இருந்தது. அதை முடித்துக்கொடுக்க சொன்னதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு தகராறு முடிந்து படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார்'' என்றார்.