நடிகைகளை எல்லைமீறி புகைப்படம் எடுப்பதா? ராஷிகன்னா எதிர்ப்பு
|நடிகைகளை எல்லைமீறி புகைப்படம் எடுப்பதா? என நடிகை ராஷிகன்னாவும் சாடி உள்ளார்.
இந்தி நடிகை அலியாபட் சமீபத்தில் வீட்டுக்குள் ஒரு அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் கேமரா மூலம் ரகசியமாக படம்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மீது அலியாபட் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் நடிகர்-நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதனை கண்டித்து வருகிறார்கள். தமிழில் அடங்க மறு, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராஷிகன்னாவும் சாடி உள்ளார்.
இதுகுறித்து ராஷிகன்னா கூறும்போது, "ஒவ்வொரு மனிதருக்கும் சொந்த வாழ்க்கை உள்ளது. சில விஷயங்களை பகிரங்கப்படுத்த விரும்பமாட்டார்கள். அதை அனைவரும் கவுரவப்படுத்த வேண்டும். பிரபலங்களை பார்க்கும்போது அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். அலியாபட் போன்ற நடிகைகளை பார்த்தால் நிச்சயம் படங்கள் எடுத்துக்கொள்ள தோன்றும். அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
அந்த எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடாது. எல்லை மீறினால் அது தாக்குதலுக்கு சமம் என்பது என் கருத்து. இப்படி நடந்தது அலியா பட்டுக்கா மற்றவருக்கா என்று நான் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் யாராக இருந்தாலும் ஒன்றுதான். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது'' என்றார்.