'விபத்தில் சிக்கிவிட போகிறீர்கள்' ...ஆட்டோ பின்னால் துரத்திய ரசிகர்களை எச்சரித்த நடிகை டாப்சி
|ஆட்டோவில் பயணித்த டாப்சியை இருசக்கர வாகனத்தில் ரசிகர்கள் பின்னால் துரத்திச்சென்று வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
மும்பை,
தமிழில் 'ஆடுகளம்' படத்தில் அறிமுகமாகி பிரபல கதாநாயகியாக உயர்ந்த டாப்சி இந்தியில் தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
டாப்சியின் படங்கள் நல்ல வசூல் பார்த்து வருவதால் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக உயர்ந்து இருக்கிறார். வெளிநாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் டாப்சி தனது தோழியுடன் ஆட்டோவில் சென்ற வீடியோ, புகைப்படங்கள் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
ஆட்டோவில் பயணித்த டாப்சியை இருசக்கர வாகனத்தில் ரசிகர்கள் பின்னால் துரத்திச்சென்று வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
பின்தொடர்ந்து வந்த ரசிகர்களை பார்த்து கவனமாக ஓட்டுங்கள், விபத்தில் சிக்கிவிட போகிறீர்கள் என்று டாப்சி எச்சரித்துக் கொண்டே செல்லும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகிறது. டாப்சி தற்போது 'ஹோ லட்கி ஹாய் கஹான்', 'ஹசீன் தில்ருபா - 2', 'கெல் கெல் மெயின்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.