ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செல்லாதது ஏன்? - வைரலாகும் டாப்சியின் பதில்
|ஆனந்த் அம்பானி திருமணத்தில் சில இந்தி நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லை.
மும்பை,
பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணம் கடந்த13-ந் தேதி இரவு வெகு விமரிசையாக நடந்தது. உலகமே உற்று நோக்கிய இந்த திருமணத்தில் உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.
ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள், இந்தியாவின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில் சில இந்தி நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லை. அவர்களில் நடிகை டாப்சியும் ஒருவர்.
இந்த திருமணத்திற்கு செல்லாதது பற்றிய கேள்விகளுக்கு டாப்சி பதில் அளிக்கையில், "எனக்கு அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பு இல்லை. திருமணம் என்பது எத்தனையோ உறவுகளோடு கூடியது. விருந்தளிக்கும் குடும்பத்திற்கும், விருந்தினர்களின் குடும்பத்திற்கும் இடையே ஏதோ ஒரு விதமான உறவு பந்தம் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அப்படிப்பட்ட திருமணங்களுக்கு மட்டும்தான் நான் செல்வேன்" என்றார். டாப்சியின் இந்த கருத்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.