உடல்நல கோளாறால் அவதிப்பட்ட டாப்சி
|ஆரோக்கியம் முக்கியம் என்பதை நான் அனைவருக்கும் எடுத்துச்சொல்லி வருகிறேன். உடல்நல குறைவை வெளியே சொல்வது அவமானம் என்று நினைத்தால் நமது ஆரோக்கியம் நமது கையை விட்டு சென்றுவிடும் என்றார் டாப்சி.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த டாப்சி இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஆரோக்கிய விஷயங்கள் குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், ''ஆரோக்கியம் முக்கியம் என்பதை நான் அனைவருக்கும் எடுத்துச்சொல்லி வருகிறேன். இதை எல்லோருக்கும் புரிய வைப்பதற்காக எனக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சினைகளை எடுத்துக்கூற விரும்புகிறேன். 'சி சி ஓ எஸ்' என்ற நோய் பாதிப்புடன் நான் போராடினேன். அதற்கான சிகிச்சையின் போது பல பக்க விளைவுகளை எதிர் கொண்டேன்.
யோகா போன்ற உடற்பயிற்சி மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தேன். சமீபத்தில் வெரிகோஸ் வெயின்ஸ் எண்ணும் நரம்பு சம்பந்தப்பட்ட சிகிச்சை கூட செய்து கொண்டேன். இதை சொல்வதற்காக வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. உடல்நல குறைவு என்பது சாதாரண விஷயம். இதை வெளியே சொல்வது அவமானம் என்று நினைத்தால் நமது ஆரோக்கியம் நமது கையை விட்டு சென்றுவிடும். வயது வந்த மகள்களுக்கு பெற்றோர் இந்த விஷயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எந்த ஆரோக்கிய பிரச்சினையாக இருந்தாலும் அவர்கள் பெற்றோர் அல்லது கணவருடன் தயக்கம் இல்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்றார்.