அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்க விரும்பவில்லை - நடிகை டாப்சி
|பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வேண்டும் என்ற ஆசை தனக்கில்லை என்று நடிகை டாப்சி கூறியுள்ளார்.
மும்பை,
'ஆடுகளம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்', 'காஞ்சனா-2', 'கேம் ஓவர்' போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்சி, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.
இவர் தற்போது, ' கேல் கேல் மெயின்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அக்சய் குமார், அம்மி விர்க், வாணி கபூர், ஆதித்யா சீல் மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் நடிகை டாப்சி பேட்டி ஒன்றில் கூறியதாவது, "நான் வேறொருவரைப் போல வாழ விரும்பவில்லை, நான் என்னைப் போலவே வாழ விரும்புகிறேன். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில்லை. என் வாழ்க்கையில் நான் எப்போதும் முதலிடத்தில் இருக்கிறேன், ஏனென்றால் நான் மட்டுமே ஓடுகிறேன், முதலிடத்தில் தான் இருப்பேன்" என்று கூறியுள்ளார்.