சென்னை
சூர்யாவின் 42-வது படம்
|தமிழ் படங்களுக்கு முன்பெல்லாம் தலைப்பை அறிவித்து விட்டு படப்பிடிப்பை தொடங்கும் நிலை இருந்தது. ஆனால் இப்போது படத்தை முழுவதும் முடித்து விட்டோ அல்லது பாதி படப்பிடிப்பை முடித்த நிலையிலோதான் வெளியிடுகிறார்கள். இந்த நிலையில் சூர்யா நடிக்கும் 42-வது படத்தின் படப்பிடிப்பையும் பெயர் வைக்காமலேயே விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள்.
இந்த படத்தை சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். சரித்திர கதையம்சம் கொண்ட படமாக தயாராகிறது. படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா இதுவரை நடிக்காத தோற்றத்தில் நடித்து வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படமாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள். 10 மொழிகளில் தயாராகி வருகிறது.
இந்த படத்துக்கு வீர், அக்னீஸ்வரன் ஆகிய பெயர்களை பரிசீலிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் 'கங்குவா' என்ற பெயரை படக்குழுவினர் தேர்வு செய்து இருப்பதாக நேற்று காலை முதல் வலைத்தளத்தில் தகவல் பரவியது. இந்த பெயரை ரசிகர்களும் வைரலாக்கினார்கள். ரஜினிகாந்த் 1984-ல் நடித்த இந்தி படத்தின் பெயர் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது.