வாடகைத்தாய் மூலம் குழந்தை: நயன்தாரா - விக்கி தம்பதிக்கு நடிகை கஸ்தூரி மறைமுக மிரட்டல்...!
|இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முறை தடை செய்யப்பட்டிருப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
கேரளாவை சேர்ந்த நயன்தாரா 2005-ல் தமிழில் 'ஐயா' படத்தில் அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கிறார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டார். இருவரும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்று வாழ்த்தினர்.
திருமணம் முடிந்ததும் திருப்பதிக்கு சென்று சாமி கும்பிட்டனர். பின்னர் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பாங்காக் சென்றுவிட்டனர். அங்கு இருவரும் தேனிலவை கொண்டாடிய புகைப்படங்களை வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். தேனிலவு முடிந்து நாடு திரும்பியதும் நயன்தாரா மும்பை சென்று ஷாருக்கானுடன் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஜவான் இந்தி படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். ஆனாலும் புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.
இதனால் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் நயன்தாரா இருக்கிறார் என்றும், இதற்காக சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக முடிவு செய்து இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன.
சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கிருந்து வெலன்சியா நகருக்கும் சென்று சுற்றி பார்த்தனர். துபாயில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நயன்தாரா கொண்டாடிய புகைப்படங்களும் வெளிவந்தன. பின்னர் இருவரும் சென்னை திரும்பினார்கள்.
இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நேற்று இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், "நானும், நயன்தாராவும் அப்பா அம்மா ஆகி விட்டோம் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. எங்கள் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிகள் இணைந்து குழந்தைகள் வடிவில் வந்துள்ளன. எங்கள் உயிர், உலகத்துக்கு உங்கள் அனைவருடைய ஆசீர்வாதங்களும் தேவை" என்று பதிவிட்டு உள்ளார். அதோடு குழந்தைகளின் கால்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
நயன்தாரா கர்ப்பமாக இருக்கும் தகவலை இருவரும் வெளியிடவில்லை. இதனால் அவருக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை பெற்று இருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களூம் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி டுவிட்டரில் இது தொடர்பாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், 'மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டள்ளார்.
இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.