< Back
சினிமா செய்திகள்
ரஜினியின் படிக்காதவன் பட குழந்தை நட்சத்திரமாக நடித்த சூர்யகிரண் காலமானார்
சினிமா செய்திகள்

ரஜினியின் 'படிக்காதவன்' பட குழந்தை நட்சத்திரமாக நடித்த சூர்யகிரண் காலமானார்

தினத்தந்தி
|
11 March 2024 5:43 PM IST

சூர்யகிரண் நடிகை சுஜாதாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

கல்லுக்குள் ஈரம், மௌன கீதங்கள், படிக்காதவன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சூரியகிரண். சத்யம், தனா 51, ராஜூபாய் உள்பட 6 தெலுங்கு படங்களை இயக்கி உள்ளார். தற்போது நடிகை வரலட்சுமி நடித்துள்ள 'அரசி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விருதும் பெற்றவர்.

சமுத்திரம், காசி உள்ளிட்ட படங்களில் நடித்த கல்யாணி என்கிற காவேரியை கடந்த 2010ம் ஆண்டு சூரியகிரண் திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், சென்னையில் வசித்து வந்த சூர்யகிரண் (வயது 48) இன்று காலமானார். கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோயின் தாக்கம் அதிகமானதால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என குடும்பதினர் தெரிவித்துள்ளனர். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜாதாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்