கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சம்பளம் இல்லாமல் நடிக்கும் சூர்யா
|தற்காலிகமாக ’சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'புதிய தொடக்கம்' எனக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். இது இவர்கள் இருவரும் இணையும் முதல் படமாகும். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப்படம் தொடர்பான பேச்சுவார்த்தை சூர்யாவுக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கும் இடையே கிட்டத்தட்ட 2.5 வருடங்களாக நடந்து வந்ததாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
கங்குவா படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 43 வது படமான புறநானூறு படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. சூர்யா, சுதா கொங்கரா உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க இருப்பதால் படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது. ஆனால் இந்த படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் சூர்யா சம்பளம் இல்லாமல் நடிக்கிறார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஏனென்றால் இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் தற்போது சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.