கைதி 2-ம் பாகத்தில் சூர்யா?
|கார்த்தி நடித்த கைதி படம் 2019-ல் வெளியாகி வெற்றி பெற்றது. கதாநாயகி, பாடல்கள் இல்லாமல் இந்த படம் வந்தது. நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் இதில் நடித்து இருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். கைதி 2-ம் பாகம் உருவாகும் என்றும், 2-ம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும்போதே படமாக்கி விட்டதாகவும், 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார்.
தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் கைதி-2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைதி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. அதே ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கைதி 2 படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.