நல்ல கதை அமைந்தால் சூர்யாவும் நானும் சேர்ந்து நடிப்போம் - நடிகை ஜோதிகா பேட்டி
|நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நிலையில் இப்போது குணசித்திர வேடங்களில் பிசியாக நடித்து வருகிறார். சைத்தான் படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார்.
இதனிடையே நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கங்குவா வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படம் என்பதால் இப்படத்தில் விதவிதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார் சூர்யா. இந்த நிலையில், கங்குவா படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார் ஜோதிகா, அதன்படி அப்படத்தின் சில காட்சிகளை மட்டுமேதான் பார்த்ததாக கூறி உள்ள அவர், அதற்கே பிரம்மித்துப் போனதாகவும், தமிழ் சினிமா இதுவரை காணாத ஒரு படமாக கங்குவா இருக்கும் என அவர் உறுதிபட கூறி இருக்கிறார். அதேபோல, கணவர் சூர்யாவுடனான உறவு மற்றும் அவருடன் சேர்ந்து நடிப்பது குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஜோதிகா அளித்துள்ள பேட்டியில்,
''சூர்யா எனக்கு நல்ல நண்பர். நான் சினிமா துறைக்கு வந்த பிறகு அறிமுகமான முதல் மனிதர் அவர்தான். என் முதல் படத்தில் அவரோடுதான் நடித்தேன் .நீண்ட காலம் நண்பர்களாகவே இருந்து ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொண்டோம்.
அவ்வளவு காலம் நண்பர்களாக இருந்ததனால் எங்களின் உறவு பலமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் மீண்டும் சேர்த்து நடிப்போமா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. நல்ல கதை அமைந்தால் நாங்கள் மீண்டும் இணைந்து நடிப்போம்''என்றார். மேலும் தற்போது தனது பெற்றோரை பார்த்துக் கொள்வதற்காக மும்பையில் தங்கி இருப்பதாகவும் விரைவில் சென்னைக்கு வந்துவிடுவோம் எனவும் ஜோதிகா கூறி உள்ளார்.
சூர்யாவும் ஜோதிகாவும் 1999-ல் வெளியான 'பூவேல்லாம் கேட்டுப்பார்' படத்தில் தொடங்கி பல வெற்றி படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் பரவி உள்ளது.