சர்ச்சைக்கு சூரி விளக்கம்
|சமீபத்தில் நகைசுவை நடிகர் சூரி பேசிய கருத்து சர்ச்சையானது. அவரை வலைத்தளத்தில் பலரும் கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர். இந்த நிலையில் சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்து பேசியதாவது:-
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி மதுரையில் சொந்தமாக ஓட்டல்கள் கட்டி தொழில் செய்து வருகிறார்.
சமீபத்தில் கோவில்கள், அன்ன சத்திரங்கள் கட்டுவதைவிட ஒருவனுக்கு கல்வி கொடுப்பது சிறந்தது என்று சூரி பேசிய கருத்து சர்ச்சையானது. அவரை வலைத்தளத்தில் பலரும் கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர். இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது பரபரப்பானது.
இந்த நிலையில் சர்ச்சைக்கு சூரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''கல்வி சிறப்பான விஷயம் என்று நான் சொன்னதை சிலர் தவறாக புரிந்து கொண்டது வருத்தமாக உள்ளது. அன்று கல்வியை பற்றி பாரதியார் சொன்னதைத்தான் நானும் சொன்னேன். நான் படிக்காதவன், எனவே மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அப்படி சொன்னேன்.
கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும். என்னை தவறாக நினைக்க வேண்டாம். நான் கோவில்களுக்கு எதிரானவன் இல்லை. சாமி கும்பிடுகிறேன். மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன். எனது ஓட்டல்களுக்கும் அம்மன் பெயரையே வைத்துள்ளேன். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அப்படி சொல்லவில்லை" என்றார்.