< Back
சினிமா செய்திகள்
சாவர்க்கர் பற்றிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த சுதா கொங்கரா
சினிமா செய்திகள்

சாவர்க்கர் பற்றிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த சுதா கொங்கரா

தினத்தந்தி
|
27 July 2024 3:39 PM IST

சாவர்க்கர் பற்றிய பேச்சுக்கு சுதா கொங்கரா வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் சுதா கொங்கரா அண்மையில் சாவர்க்கர் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில், "நான் பெண் கல்வி குறித்து படித்தபோது, எனது ஆசிரியர் ஒருவர் சாவர்க்கர் பற்றிய கதையை சொன்னார். சாவர்க்கர் ஒரு மதிப்பிற்குரிய தலைவராக இருந்துள்ளார். திருமணத்துக்குப் பின்னர் அவர் தனது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்.

ஆனால் அந்த பெண்ணுக்கு அதில் விருப்பமில்லை. ஏனெனில் அந்த காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள். சாவர்க்கரின் மனைவி படிப்பதற்காக சென்றபோது அவரை அந்த தெருவில் இருந்தவர்கள் கேலி செய்துள்ளனர். இதையறிந்த சாவர்க்கர், தனது மனைவியை தானே பள்ளிக்கு அழைத்துச் சென்று படிக்க வைத்துள்ளார்" என்று பேசி இருந்தார்.

சுதா கொங்கராவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பல்வேறு தரப்பினர் இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், சாவர்க்கர் பற்றிய தனது பேச்சுக்கு சுதா கொங்கரா வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்துநான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன்.

மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்