< Back
சினிமா செய்திகள்
திடீர் உடல்நலக்குறைவு: டைரக்டர் பாரதிராஜா ஆஸ்பத்திரியில் அனுமதி
சினிமா செய்திகள்

திடீர் உடல்நலக்குறைவு: டைரக்டர் பாரதிராஜா ஆஸ்பத்திரியில் அனுமதி

தினத்தந்தி
|
24 Aug 2022 6:13 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி டைரக்டரான பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பாரதிராஜாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பாரதிராஜா 1977-ல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த 16 வயதினிலே படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார்.

கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், காதல் ஓவியம், மண் வாசனை, கடலோர கவிதைகள், புதுமைப்பெண், கருத்தம்மா, வேதம் புதிது உள்ளிட்ட பல வெற்றி படங்களை டைரக்டு செய்துள்ளார். சில படங்கள் தேசிய விருது பெற்றுள்ளன. சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை படத்தையும் இயக்கினார்.

இந்த படத்துக்கும் தேசிய விருது கிடைத்தது. 1990-களில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் பாரதிராஜாவுக்கு உண்டு. தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுசுக்கு தாத்தாவாக நடித்து இருந்தார்.

மேலும் செய்திகள்