பிரகாஷ்ராஜுக்கு மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு
|நடிகர் பிரகாஷ் ராஜ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரியின் மாணவர் அமைப்பினர் கல்லூரி வளாகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பத்ராவதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சினிமா-சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரியின் மாணவர் அமைப்பினர் கல்லூரி வளாகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து கல்லூரி நுழைவுவாயில்கள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் யாரும் கல்லூரிக்குள் நுழைய முடியவில்லை. நிகழ்ச்சியும் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. பிரகாஷ்ராஜும் சிறப்புரையாற்றி சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு சென்ற மாணவர் அமைப்பினர் பிரகாஷ்ராஜ் நிகழ்ச்சி நடந்த இடம் முழுவதும் பசு கோமியம் தெளித்து சுத்தம் செய்தனர். இதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். மாணவர்கள் தவிர வேறு சிலரும் இதில் ஈடுபட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.