அத்து மீறிய மாணவர்...! பதிலடி கொடுத்த நடிகை அபர்ணா பாலமுரளி
|உங்களின் ரசிகனாக உங்களுடன் போட்டோ எடுக்க தான் வந்தேன் என விளக்கம் அளித்துவிட்டு. மீண்டும் அபர்ணாவுக்கு கைகொடுக்க முயன்றார்
திருவனந்தபுரம்
மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்
அபர்ணா பாலமுரளிநடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அதனை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் தட்டிச் சென்றார் . இதையடுத்து தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அபர்ணா.
அவர் நடிப்பில் தற்போது தங்கம் என்கிற மலையாள படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற ஜனவரி 26-ந் தேதி ரிலீஸாக உள்ளது. சஹீத் அராபத் இயக்கியுள்ள இப்படத்தில் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி. இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் தன்கம் படத்தின் புரமோஷனுக்காக கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் அமர்ந்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளியிடம் வந்த கல்லூரி மாணவர் ஒருவர், அவருக்கு பூ கொடுத்துவிட்டு, சட்டென அவரது கையை பிடித்துள்ளார். பின்னர் அவருடன் போட்டோ எடுப்பதற்காக எழுந்தபோது அந்த மாணவர் தோள்மீது கையை போட்டதை சற்றும் விரும்பாத அபர்ணா, அவரின் பிடியில் இருந்து நழுவி மீண்டும் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.
பின்னர் மீண்டும் மேடை ஏறி வந்த அந்த மாணவர், தான் தவறாக எதுவும் நடந்துகொள்ளவில்லை. உங்களின் ரசிகனாக உங்களுடன் போட்டோ எடுக்க தான் வந்தேன் என விளக்கம் அளித்துவிட்டு. மீண்டும் அபர்ணாவுக்கு கைகொடுக்க முயன்றார். அப்போது அந்த நபருக்கு கைகொடுக்க மறுத்து விட்டார் அபர்ணா பாலமுரளி. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.