நடிகை கத்ரினா கைப்க்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது
|கத்ரீனா மற்றும் விக்கி கவுசல் தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுத்த மன்விந்தர்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கத்ரினா கைப். இவர் சல்மான்கான், ஷாரூக்கான், அமீர்கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கத்ரினா கைப்பும் இந்தி நடிகர் விக்கி கவுசலும் காதலித்து கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். கத்ரினா கைப் தற்போது விஜய் சேதுபதியுடன் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது மனைவி கத்ரினா கைப்புக்கும் தனக்கும் சமூக வலைதளத்தில் மர்மநபர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கத்ரினாவை பின் தொடர்ந்து மிரட்டுவதாகவும் நடிகர் விக்கி கவுசல், மும்பை சாந்தாகுரூஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் கொலை மிரட்டல் விடுத்த மன்விந்தர்சிங் என்பவரை கைது செய்தனர். இவர் கத்ரினா கைப் தனது மனைவி என்ற பதிவுடன் அவரோடு சேர்ந்து இருப்பது போன்ற மார்பிங் செய்த புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.