'ஸ்ட்ரீ 2': ஷ்ரத்தா கபூர் கதாபாத்திரத்தின் பெயர் என்ன? - இயக்குனர் அமர் கவுசிக் பதில்
|'ஸ்ட்ரீ 2' படத்தில் ஷ்ரத்தா கபூர் கதாபாத்திரத்தின் பெயரை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சென்னை,
அமர் கவுஷிக் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'ஸ்ட்ரீ ' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் கடந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் பங்கஜ் திரிபாதி, அபர்சக்தி குரானா மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோரும் நடித்தனர்.
இப்படத்தில், ஷ்ரத்தா கபூர் கதாபாத்திரத்தின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், படத்தின் ஒரு காட்சியில் தனது பெயரை, விக்கியாக நடித்திருந்த ராஜ்குமார் ராவ் காதில் சொல்லுவார்.
அப்போதிலிருந்து ஷ்ரத்தா கபூர், காதில் என்ன பெயரை சொல்லி இருப்பார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் இயக்குனர் அமர் கவுசிக்கிடம் படத்தில் ஷ்ரத்தா கபூர் கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்
'அது ஒரு பெரிய மர்மம். அதை அறிய இன்னும் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்' என்று பதிலளித்தார். இதனையடுத்து, இப்படத்தின் 3-ம் பாகத்தில் இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.