< Back
சினிமா செய்திகள்
பழைய வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் - நடிகை வரலட்சுமி சரத்குமார்

Image Courtesy : @varusarath5

சினிமா செய்திகள்

'பழைய வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்' - நடிகை வரலட்சுமி சரத்குமார்

தினத்தந்தி
|
14 March 2024 4:46 PM IST

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

சென்னை,

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, சண்டக்கோழி-2, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார், தற்போது தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் மும்பையில் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனிடையே அவரது தந்தை சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்தார். இந்த சூழலில், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், " சில ஊடகங்களில் பழைய வதந்திகள் பரவி வருவது வருத்தமளிக்கிறது. பத்திரிக்கையாளர்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள், பிரபலமான நபர்களிடம் குறைகளை கண்டுபிடிப்பதை விட, உண்மையான பத்திரிக்கை பணியை செய்ய வேண்டும்.

நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. அதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எங்கள் அமைதியை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பழைய வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். நாம் அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் ஊடகப் பணியை செய்யுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் மேலாளராக பணியாற்றிய ஆதிலிங்கம் என்ற நபரை போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து வரலட்சுமி சரத்குமாரிடம் விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக தகவல்கள் பரவின.

இதற்கு அந்த சமயத்தில் வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்திருந்தார். அதில், தனக்கு சம்மன் எதுவும் அனுப்பப்படவில்லை எனவும், ஆதிலிங்கம் என்பவர் மிகக்குறைந்த காலமே தன்னிடம் பணியாற்றியதாகவும், விசாரணைக்கு அழைக்கப்பட்டால் நிச்சயம் ஒத்துழைப்பேன் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்