பூஜையுடன் தொடங்கியது 'இன்று நேற்று நாளை - 2'
|'இன்று நேற்று நாளை - 2' படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை,
விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'இன்று நேற்று நாளை'. இந்த படத்தை இயக்குனர் ரவிகுமார் இயக்கினார். சைபை காமெடி திரைப்படமாக வெளியான இந்த படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரித்தது. அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற பிரபல படங்களை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
அந்த வரிசையில் தற்போது இந்த நிறுவனம் 'பீட்சா 4 - ஹோம் அலோன்' திரைப்படத்தையும் 'இன்று நேற்று நாளை' இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கான தொடக்க விழா சென்னையில் உள்ள திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழா தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
டைம் டிராவல் கதையம்சம் கொண்ட 'இன்று நேற்று நாளை' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.