ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய இயக்குநர் ராஜமவுலி
|இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா எக்ஸ் தளத்தில் ஜப்பான் நிலநடுக்கம் பற்றிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மகன் கார்த்திகேயாவுடன் இயக்குநர் ராஜமவுலி தற்போது ஜப்பானில் உள்ளார். அங்கு இன்று அதிகாலையில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் அப்பாவுடன் 28 -வது மாடியில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தோம் என்றும் அவரது மகன் கார்த்திகேயா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, 'ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28வது மாடியில் இருந்ததால், தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. இது நிலநடுக்கம் என்பதை உணர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது.
நாங்கள் அனைவரும் பயத்தில் இருந்தோம். ஆனால், சுற்றியிருந்த ஜப்பானியர்கள் எல்லாம் மழை பெய்ய ஆரம்பித்தது போல் அசையவில்லை' எனச் சொல்லி தனது ஸ்மார்ட் வாட்சில் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை வந்த குறுஞ்செய்தியையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். கடந்த வாரத்தில் ஜப்பானில் ரிக்டர் அளவுகோலில் 6 எனப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ராஜமவுலி தனது குழுவுடன் தற்போது ஜப்பானில் உள்ளார். அங்கு, 'ஆர்.ஆர்.ஆர்' படத்திற்கான ஸ்பெஷல் ஸ்கிரீனிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அங்கு பேசியவர் அடுத்து மகேஷ் பாபுவுடன் புதிய படம் ஒன்றில் இணைய இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் பகிர்ந்ததாவது, "நான் என்னுடைய அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கி விட்டேன். திரைக்கதை பணி முடிந்தது. நடிகர்கள் குறித்து இன்னும் உறுதியாகவில்லை. மகேஷ்பாபு மட்டும் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்" எனக் கூறினார்.
ஆர்.ஆர்.ஆர் சிறப்புத் திரையிடலுக்குப் பிறகு, ராஜமௌலி அவரும் அவரது மனைவி ராமாவும் 83 வயது ரசிகரை கட்டிப்பிடிக்கும் படங்களை பகிர்ந்து இருந்தது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.